உயிர்காக்கும் ரகசியப் பயணம் வெளியானது!ஈரானுக்கு எதிரான போரின் போது நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியமாகப் பயணம் செய்த சேதி தற்போது வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் உச்சத்தில் இருந்தபோது, பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு ரகசியப் பயணம் மேற்கொண்டு, ஷேக் முகமது பின் சயீத்தை நேரில் சந்தித்தார். இஸ்ரேலிய சனல் 12 இந்தச் செய்தியை வெளியிட்ட பிறகு, நெதன்யாகுவின் சொந்த அலுவலகமே இந்தப் பயணத்தை உறுதி செய்துள்ளது.மத்தியகிழக்கில் தனக்கு பாதுகாப்பான ஒரு இடமாக நெதன்யாஹு UAE ஐ தேர்ந்தெடுத்திருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலுடன் அணிசேரத் தேர்ந்தெடுத்துள்ளது, இதனால்தான் ஈரான் அவர்களுடன் மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறது.இந்த செய்தி தொடர்பில் தெரிய வருவதாவது,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான போரின் போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ரகசியப் பயணம் மேற்கொண்டதாக அவரது அலுவலகம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ரகசியப் பயணம், ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் ரோர் ஆப் தி லயன்’ (Operation ‘Roar of the Lion’) இராணுவ நடவடிக்கையின் உச்சக்கட்டத்தின் போது நிகழ்ந்தது என்று நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.இப்பயணத்தின் போது, நெதன்யாகு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை (Mohammed bin Zayed Al Nahyan) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இச்சந்திப்பு இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இருதரப்பு உறவுகளில் ஒரு “வரலாற்று திருப்புமுனையை” (Historic Breakthrough) ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் தரப்பு விவரித்துள்ளது.

சர்வதேச ஊடகங்களின்படி, அமீரகத்தின் ‘அல் அய்ன்’ (Al Ain) நகரில் இந்த சந்திப்பு பல மணி நேரம் நீடித்தது. பிராந்திய பாதுகாப்பு மற்றும் தூதரக உறவுகள் குறித்து இந்த ஆலோசனையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்த ரகசியப் பயணம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு உறுதிப்படுத்தலையோ அல்லது கருத்துகளையோ தெரிவிக்கவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கையெழுத்தான ‘ஆபிரகாம் உடன்படிக்கை’ (Abraham Accords) மூலம் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டன. இருப்பினும், பிராந்திய மோதல்கள் மற்றும் காசாவில் நடந்து வரும் போர் காரணமாக சமீப காலமாக இரு நாட்டு உறவுகளில் சுணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.