இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய துறைகளில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.வியட்நாம் ஜனாதிபதி தோ லாம் (Tô Lâm) அவர்கள் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பின்வரும் துறைகளில் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன:
1. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்: இரு நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேம்பாடு.
2. கலாசார ஒத்துழைப்பு: கலை மற்றும் கலாசார விழுமியங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான இணக்கம்.
3. மத விவகாரங்கள் மற்றும் கல்வி: மத விழுமியங்களைப் பாதுகாத்தல், மதக்கல்வி மற்றும் மாணவர் நலன்புரி திட்டங்களை மேம்படுத்தல்.
4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு.
5. பொலிஸ் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி: இலங்கையின் தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம் மற்றும் வியட்நாமின் மக்கள் பொலிஸ் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே பயிற்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான புரிந்துணர்வு.
மேலும் வியட்நாம் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 1,000 மெட்ரிக் தொன் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.இந்த விஜயமானது 1970 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை – வியட்நாம் இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டை முன்னிட்டு அமைந்த ஒரு வரலாற்று மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
