சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலனைக் கருத்திற்கொண்டு, கொன்சியுலர் சேவைகளை மேலும் விரிவுபடுத்த ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

சாதாரண வேலை நாட்களில் (ஞாயிறு – வியாழன்) தமது பணிகளிலிருந்து விடுமுறை பெற முடியாத மற்றும் தூதரகத்திற்கு வர இயலாத இலங்கையர்களுக்காக, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை அன்று கொன்சியுலர் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட தினங்களில் பின்வரும் சேவைகளை எவ்வித தடையுமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்கள், புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல், ஆவண அத்தாட்சிப்படுத்தல், கல்வி மற்றும் தொழில்சார் சான்றிதழ்களை உறுதிப்படுத்தல், பிறப்பு மற்றும் திருமணப் பதிவு, சிவில் ஆவணங்களைப் பதிவு செய்தல், அவசர பயண ஆவணங்கள், அவசரமாக நாடு திரும்புவோருக்கான ஆவணங்களை வழங்குதல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

தூதரக அதிகாரிகளின் கருத்துப்படி, சவூதியின் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் இலங்கையர்கள் வார நாட்களில் ரியாத் அல்லது ஜித்தா நகருக்கு வருவதற்கு அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்களின் வசதிக்காகவும், எவ்வித தாமதமுமின்றி சேவைகளை உறுதிப்படுத்துவதற்காகவுமே இந்த வெள்ளிக்கிழமை விசேட சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான அறிவுறுத்தல் குறித்த வெள்ளிக்கிழமைகளில் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், தமது அசல் ஆவணங்கள் மற்றும் அவற்றின் நிழற்படப் பிரதிகளுடன் (Copies) சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்னதாகவே அனுமதியைப் (Appointment) பெற்றுக்கொள்வது உங்கள் நேரத்தைச் சேமிக்க உதவும் என தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

By RifkaNF